முகவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் - செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்
வாக்கு எண்ணும் மையங்களில் எந்தவிதமான தவறுகளும் நடக்க வாய்ப்பு அளிக்காமல், கவனத்தோடு செயல்பட வேண்டும் என்று செல்வப்பெருந்தகை அறிவுறுத்தி உள்ளார்.;
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்து, வருகிற ஜூன் 4-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போது, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். தபால் வாக்குகள் எண்ணி முடிந்த பிறகுதான், வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட வேண்டும். தபால் வாக்குகள் எண்ணிக்கை எந்த காரணம் கொண்டும் தாமதப்படுத்தாமல் விரைவாக எண்ணி அதன் முடிவுகளை உறுதி செய்ய வேண்டும்.
வாக்கு எண்ணும் மையங்களின் முகவர்கள், எந்த வாக்கு பதிவு எந்திரத்திலாவது சீல்கள் சேதமடைந்திருந்தாலோ, எந்திரத்தின் எண் ஒத்துப்போகவில்லை என்றாலோ அந்த எந்திரத்தை அனுமதிக்காமல் தனியாக ஒதுக்கி வைக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் எந்தவிதமான தவறுகளும் நடக்க வாய்ப்பு அளிக்காமல், முகவர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். மேலும், காலை 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைகிற வரை வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.