தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அ.தி.மு.க. பரபரப்பு புகார்
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
திருச்சி மணப்பாறை பகுதியில் கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சிலருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மைதான். அனைவருக்கும் கிடைக்க நிச்சயம் வழிவகை செய்யப்படும். மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து விடுபட்ட 40 லட்சம் மகளிருக்கும் அடுத்த 4 மாதங்களில் உரிமை தொகை கொடுப்பேன்" என்று கூறினார்.
இந்த நிலையில் அடுத்த 4 மாதங்களில் விடுபட்ட 40 லட்சம் மகளிருக்கும் உரிமைத் தொகை கொடுப்பேன் என்று அமைச்சர் உதயநிதி கூறுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று தமிழக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மாநில செயலாளர் இன்பதுரை தலைமையிலான வக்கீல்கள் குழுவினர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் இதுகுறித்து புகாரளித்தனர்.