7-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் மோடி உட்பட 904 வேட்பாளர்கள் போட்டி
57 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இறுதிக் கட்டமாக நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.;
புதுடெல்லி,
கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் இதுவரை 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.
எஞ்சியுள்ள 57 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இறுதிக் கட்டமாக நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதில் உத்தரபிரதேசத்தில் 13, மேற்குவங்காளத்தில் 9, பீகாரில் 8, இமாச்சலபிரதேசத்தில் 4, ஜார்கண்ட் மாநிலத்தில் 3, ஒடிசாவில் 6, சண்டிகாரில் 1, பஞ்சாப்பில் 13 ஆகிய தொகுதிகள் அடங்கும். பிரதமர் மோடி 3-வது முறையாக போட்டியிடும் வாரணாசி தொகுதி, உலக மக்களால் அதிகம் கவனிக்கப்படும் தொகுதியாக உள்ளது.
கடைசி கட்டமாக நடைபெறும் தேர்தலில் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பிரதமர் மோடி, லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பாரதி (பாடலிபுத்திரா), நடிகை கங்கனா ரணாவத் (மண்டி), ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்றத்துடன், சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஏற்கனவே 3 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள 42 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.