வாக்காளர் பட்டியலில் 88.4 லட்சம் மாற்றுத்திறனாளிகள் - இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

40 சதவீத இயலாமை கொண்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-03-16 12:55 GMT

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று வெளியிட்டுள்ளார். இதன்படி 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், நாடு முழுவதும் 97.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும், அதில் 49.72 கோடி பேர் ஆண் வாக்காளர்கள், 47.1 கோடி பெண் வாக்காளர்கள் என்றும் தெரிவித்தார்.

அதோடு வாக்காளர் பட்டியலில் 88.4 லட்சம் மாற்றுத்திறனாளிகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராஜீவ் குமார் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக வாக்குச் சாவடிகளில் சாய்வுதளம் அமைக்கப்படும் என்றும் சக்கர நாற்காலிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் 40 சதவீத இயலாமை கொண்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என்றும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், மொத்தம் 91 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் மொத்தம் 62.63 லட்சம் பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்