நாளை நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் களம் காணும் 8 மத்திய மந்திரிகள்
நாளை நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 8 மத்திய மந்திரிகள், 3 முன்னாள் முதல்-மந்திரிகள், ஒரு முன்னாள் கவர்னரின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.;
புதுடெல்லி,
இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி (நாளை) முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. இதற்காக நாடு முழுவதும் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.
இதில் முதற்கட்ட தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
இதில் முக்கியமாக, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரேயொரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதைத்தவிர மராட்டியம், அசாம், அருணாசல பிரதேசம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு உட்பட்ட சில தொகுதிகளிலும் நாளை தேர்தல் நடக்கிறது.
இந்த முதற்கட்ட தேர்தல் 8 மத்திய மந்திரிகள், 3 முன்னாள் முதல்-மந்திரிகள், ஒரு முன்னாள் கவர்னரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமைந்து உள்ளது.
அந்தவகையில் தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் களமிறங்கி இருக்கிறார்.
இவர் போட்டியிடும் தென் சென்னை தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. கவர்னர் மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.
மேற்கு திரிபுரா தொகுதியில் மாநில முன்னாள் முதல்-மந்திரி பிப்லாப் குமார் தேவ் பா.ஜனதா சார்பில் களமிறங்கி இருக்கிறார். இந்த தொகுதியில் இவருக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் ஆஷிஷ் குமார் சகாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
அருணாசல் மேற்கு தொகுதியில் அந்த மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான நபம் துகி களமிறக்கப்பட்டு உள்ளார். ஆனால் இந்த தொகுதியில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு 4-வது முறையாக மீண்டும் களமிறங்கி உள்ளார். இதனால் களம் சூடுபிடித்து இருக்கிறது.
மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி சர்பானந்தா சோனோவால் போட்டியிடும் அசாமின் திப்ரூகார் தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருக்கும் இவரும் முன்னாள் முதல்-மந்திரி ஆவார்.
மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி மராட்டியத்தின் நாக்பூர் தொகுதியில் களம் காண்கிறார். கடந்த தேர்தல்களில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்து வரும் கட்காரி, இந்த முறையும் வெற்றிக்கோட்டை தொடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் தமிழகத்தின் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அவரை எதிர்த்து தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மும்முனைப்போட்டி நிலவும் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் மத்திய மந்திரி சஞ்சீவ் பல்யான் பா.ஜனதா வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார். அந்த தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் ஹரிந்திர மாலிக், பகுஜன் சமாஜ் வேட்பாளர் தாராசிங் பிரஜாபதி ஆகியோர் இவருக்கு கடும் சவால் அளித்து வருகின்றனர்.
ஜூன் 4-ந்தேதி தெரியும்
மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மெக்வால் போட்டியிடும் ராஜஸ்தானின் பீகானேர் தொகுதியும் கவனிக்கத்தக்க தொகுதியாக மாறியிருக்கிறது.
மேலும் காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றிக்காக களமிறங்கி இருக்கும் மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங், ராஜஸ்தானின் அல்வார் தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி பூபேந்திர யாதவ் ஆகியோரும் நாளைய தேர்தலில் குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் ஆவர்.
தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள இந்த வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந்தேதி தெரியவரும்.