தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்: சத்யபிரத சாகு தகவல்

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன.;

Update:2024-05-27 15:33 IST

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், வரும் ஜூன் 1-ந்தேதி 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், 2024- மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள், இணைத்தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்தில், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் சங்கர்லால் குமாவத், இணைத் தலைமைத் தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500-க்கும் அதிகமானோர் ஈடுபட உள்ளனர். அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கு 3,300 மேஜைகள் அமைக்கப்பட உள்ளன. காலை 8 மணிக்கு தபால் வாக்கு, 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக வீடியோ பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்