மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 25 வயது இளம் வேட்பாளர்கள்

தேர்தலில் போட்டியிட்ட 25 வயது இளம் வேட்பாளர்கள் 4 பேர் வெற்றி பெற்று எம்.பி. ஆக பதவியேற்க உள்ளனர்.;

Update:2024-06-05 12:25 IST

புதுடெல்லி,

இந்தியாவில் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட்ட 25 வயது இளம் வேட்பாளர்கள் 4 பேர் வெற்றி பெற்று எம்.பி. ஆக பதவியேற்க உள்ளனர். இதன்படி பீகார் மாநிலம் சமஸ்திபூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களமிறங்கிய லோக் ஜன்சக்தி கட்சி வேட்பாளர் சாம்பவி சவுத்ரி 1,87,251 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பீகார் மந்திரி அசோக் சவுத்ரியின் மகள் ஆவார். தேர்தல் பிரசாரத்தின்போது இவரை தேசிய ஜனநாயக கூட்டணியின் இளம் வேட்பாளர் என்று பிரதமர் மோடி பாராட்டினார்.

அதே போல் ராஜஸ்தானின் பாரத்பூர் தொகுதியில் இளம் காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சனா ஜாதவ் போட்டியிட்டார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ராம்சுவரூப் கோலியை 51,983 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு கட்சி ஆதரவாளர்களுடன் சஞ்சனா ஜாதவ் உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

மேலும் உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர்கள் புஷ்பேந்திர சரோஜ் மற்றும் பிரியா சரோஜ் ஆகிய இருவரும் தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். உத்தர பிரதேசத்தின் கவுஷாம்பி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் வினோத் குமாரை 1,03,944 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி புஷ்பேந்திர சரோஜ் வெற்றி பெற்றார். இவர் முன்னாள் மந்திரி இந்தர்ஜித் சரோஜின் மகன் ஆவார்.

இதே போல் மற்றொரு சமாஜ்வாடி வேட்பாளர் பிரியா சரோஜ், மச்சிலிஷாஹர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரும், எம்.பி.யுமான போல்நாத்தை 35,850 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். பிரியா சரோஜ் உத்தர பிரதேச மந்திரி தூபானி சரோஜின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்