2024 மக்களவை தேர்தல்; போட்டியிட்ட கட்சிகள் பற்றி ஓர் அலசல் ஆய்வு
2009 முதல் 2024 வரையிலான 15 ஆண்டுகளில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 104 சதவீதம் உயர்ந்து உள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி என இரு பெரும் தேசிய கட்சிகள் எதிரெதிராக களம் கண்டன.
இதனை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை கடந்த 4-ந்தேதி நடந்தது. இதில், பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட அக்கட்சி 32 தொகுதிகள் குறைவாக பெற்றுள்ளது. எனினும், தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளை கைப்பற்றி 2-வது பெரிய கட்சியாகவும், 37 தொகுதிகளை கைப்பற்றி சமாஜ்வாடி கட்சி 3-வது பெரிய கட்சியாகவும் உள்ளன.
இந்நிலையில், பி.ஆர்.எஸ். என்ற அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில், 2024 மக்களவை தேர்தலில் 41 கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். 2019 மக்களவை தேர்தலில் 36 கட்சிகள் போட்டியிட்டன. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இந்த தேர்தலில் தேசிய கட்சிகள் 346 இடங்களை கைப்பற்றி உள்ளன. இது மொத்தத்தில் 64 சதவீதம். மாநில அங்கீகாரம் பெற்ற கட்சிகள் 179 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இது 33 சதவீதம் ஆகும். அங்கீகாரம் பெறாத கட்சிகள் 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இவை தவிர, சுயேச்சை வேட்பாளர்கள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு என்ற தேர்தல் உரிமைகளுக்கான அமைப்பு ஒன்று, இந்த தேர்தலில் போட்டியிட்ட, 8,337 வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை விரிவான முறையில் ஆய்வு செய்தது.
இதில், 1,333 பேர் தேசிய கட்சிகளையும், 532 பேர் மாநில கட்சிகளையும், 2,580 பேர் பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகாரம் பெறாத கட்சிகளையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தவிர, சுயேச்சை வேட்பாளர்கள் 3,915 பேரும் உள்ளனர்.
இந்த ஆய்வு முடிவு, 2009 முதல் 2024 வரையிலான 15 ஆண்டுகளில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 104 சதவீதம் உயர்ந்து உள்ளது என தெரிவிக்கின்றது.
2024-ம் ஆண்டில் மொத்தம் 751 கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. இந்த எண்ணிக்கை, 2019-ம் ஆண்டில் 677 ஆகவும், 2014-ம் ஆண்டில் 464 ஆகவும், 2009-ம் ஆண்டில் 368 ஆகவும் இருந்தது.