சிறையில் உள்ள 2 பேர் மக்களவை எம்.பி.க்களாக தேர்வு; அடுத்து என்ன நடக்கும்...?
காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத் ஷேக் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்த குற்றச்சாட்டின்பேரில், திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடத்தி முடிக்கப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில், சீக்கிய மத போதனையாளரான அம்ரித்பால் சிங், பஞ்சாபின் கடூர் சாகிப் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோன்று, ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு, சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத் ஷேக் வெற்றி பெற்றார். இவர், என்ஜினீயர் ரஷீத் என்றும் பரவலாக அறியப்படுகிறார்.
பயங்கரவாதத்திற்கு நிதி அளித்த குற்றச்சாட்டின்பேரில், 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந்தேதி முதல் திகார் சிறையில் இவர் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதேபோன்று, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2023-ம் ஆண்டு ஏப்ரலில் கைது செய்யப்பட்ட அம்ரித்பால் சிங் அசாமில் உள்ள திப்ரூகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த இருவரும் புதிதாக எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் இருவரும் பதவி பிரமாணம் எடுத்து கொள்ள அனுமதிக்கப்படுவார்களா? ஆம் என்றால் எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி அரசியல் சாசன நிபுணர் மற்றும் மக்களவையின் முன்னாள் பொது செயலாளர் பி.டி.டி. ஆச்சாரி கூறும்போது, எம்.பி.யாக பதவியேற்பது என்பது அரசியல் சாசன உரிமை. எனினும், அவர்கள் சிறையில் உள்ளனர் என்ற சூழலில், பதவி பிரமாண நிகழ்ச்சியில் பங்கேற்க, நாடாளுமன்றத்திற்கு செல்ல பாதுகாப்பு வேண்டுமென அதிகாரிகளிடம் இருவரும் அனுமதி கேட்க வேண்டும்.
அவர்கள் பதவி ஏற்றதும், சிறைக்கு திரும்ப வேண்டும். பதவி பிரமாணம் எடுத்து கொண்டதும், சபாநாயகருக்கு அவர்கள் கடிதம் எழுத வேண்டும். அவையில் பங்கேற்க முடியாது என அதில் தெரிவிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கையை சபாநாயகர், அவைக்கு வராத உறுப்பினர்களுக்கான அவை கமிட்டிக்கு அனுப்பி வைப்பார்.
இந்த கமிட்டியானது, அவை நடவடிக்கைகளில் அந்த குறிப்பிட்ட எம்.பி.க்கள் பங்கேற்காமல் இருக்க அனுமதிப்பது அல்லது மறுப்பது ஆகியவற்றை பற்றி பரிந்துரை வழங்கும். இந்த பரிந்துரை, பின்னர் சபாநாயகரால் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
ரஷீத் அல்லது சிங், குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு, குறைந்தது 2 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்பட்டால், 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி உடனடியாக, அவர்கள் மக்களவைக்கான உறுப்பினர் பதவியை இழப்பார்கள். இதுபோன்ற தருணங்களில், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
இந்த தீர்ப்புக்கு முன் வரை, சிறையில் உள்ள உறுப்பினர்கள், மேல்முறையீடு செய்ய 3 மாத காலம் அவகாசம் வழங்கப்படும். அதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(4) அனுமதி அளித்திருந்தது. இந்த பிரிவு பின்னர் நீக்கப்பட்டு விட்டது.