பா.ஜ.க.வில் இணைந்த 14,700 காங்கிரசார்; கின்னசுக்கு விண்ணப்பிப்போம்: நரோட்டம் மிஸ்ரா கிண்டல்

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை கண்டறிய காங்கிரஸ் கட்சியினர் போராடி கொண்டிருக்கிறார்கள் என்று மிஸ்ரா கூறினார்.

Update: 2024-03-21 21:19 GMT

போபால்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு, ஆளும் பா.ஜ.க. தேசிய ஜனநாயக கூட்டணி பெயரில் அரசியல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. மற்றொருபுறம், இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த சூழலில், காங்கிரசிலிருந்து பா.ஜ.க.வில் இணைந்து வரும் முக்கிய பிரமுகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்படி, மத்திய பிரதேச மாநிலத்தின் விந்திய பகுதியில் இருந்து எண்ணற்ற காங்கிரசார், போபால் நகரில் உள்ள பா.ஜ.க. மாநில கட்சி அலுவலகத்திற்கு வந்து அக்கட்சியில் இணைந்தனர்.

இதுபற்றி பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் அக்கட்சியின் புதிய இணைப்பு குழுவுக்கான மத்திய பிரதேச மாநில ஒருங்கிணைப்பாளர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசினார். காங்கிரசிலிருந்து நீரோட்டம் போல் நிறைய பேர் வெளியேறி வருவது பற்றி அவர் கூறும்போது, காங்கிரசில் ஏறக்குறைய கூட்ட நெரிசல் போன்ற சூழலே காணப்படுகிறது.

இதுவரை, முன்னாள் மத்திய மற்றும் மாநில மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள், நகராட்சி தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட 14 ஆயிரத்து 700 காங்கிரஸ் உறுப்பினர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

இதுவே காங்கிரஸ் கட்சியின் சூழ்நிலை. அவர்கள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை கண்டறிய போராடி கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.

காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலரையும் தங்களுடைய கட்சியில் சேர்த்ததற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என முறைப்படி நாங்கள் விண்ணப்பிப்போம் என அவர் கிண்டலாக கூறினார்.

காங்கிரஸ் முன்னாள் மத்திய பிரதேச மாநில தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கமல்நாத் பா.ஜ.க.வில் இணைவார் என தொடர்ந்து யூகங்கள் வெளிவரும் சூழலில், மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் அதுபற்றி அவர்கள் சிந்திப்பார்கள் என்று மிஸ்ரா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்