ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம்.. திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2024-08-19 09:00 GMT

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

அவ்வகையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இடைவேளை இல்லாமல் பக்தர்கள் தொடர்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். சுமார் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி,ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பவுர்ணமி கிரிவலத்திற்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்