அபுதாபி இந்து கோவிலில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியது

இந்த ஈத் அல் அதா எனப்படும் பக்ரீத் பண்டிகை விடுமுறையில் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Update: 2024-06-17 11:23 GMT

அபுதாபி,

அபுதாபி இந்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அபுதாபியில் உலகளாவிய நல்லிணக்கத்திற்கான ஆன்மீக சோலை என போற்றப்படும் மணற்கல் ஆலயம் உலகம் முழுவதிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இதில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி முதல் நடப்பு ஆண்டின் ஜூன் 14-ந் தேதி வரை பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவில் திறக்கப்பட்டு இதுவரை வருகை புரிந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது.

10 லட்சம் பேரின் பிரார்த்தனைகள், இதயங்கள், நம்பிக்கைகள், அன்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் கதைகளை நாங்கள் கொண்டாடுகிறோம். தற்போது இந்த ஈத் அல் அதா எனப்படும் பக்ரீத் பண்டிகை விடுமுறையில் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்துகொண்டு மட்டுமே வருகை புரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாதவர்களுக்கு அனுமதி இல்லை. இந்த விடுமுறை நாட்களில் சுவாமி தரிசன நேரம் காலை 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) கோவிலுக்கு விடுமுறையாகும். நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கோவில் திறந்திருக்கும். பார்வையாளர்களின் வசதிக்காக அபுதாபி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 203 வழித்தட எண் கொண்ட பஸ் அல் முரைக்காவில் கோவிலுக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தம் வரை இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்