ஹர்தீப் சிங் நிஜ்ஜார் விவகாரம்: இந்தியா இறையாண்மையை மீறிவிட்டது - கனடா பிரதமர்

நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க வலுவான ஆதாரம் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறியுள்ளார்.;

Update: 2024-10-17 03:20 GMT

ஒட்டாவா,

கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்குப்பின்னால் இந்தியாவின் சதி இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குற்றம் சாட்டியிருந்தார்.

இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்ததுடன், அதற்கான ஆதாரங்களை வழங்குமாறு கனடாவை வலியுறுத்தியது. ஆனால் அவற்றை வழங்காத கனடா அரசு, தொடர்ந்து இந்தியாவை குற்றம் சாட்டியது. இதனால் இரு நாட்டு உறவுகளில் விரிசலும் ஏற்பட்டது.

இந்த நிலையில் நிஜ்ஜார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கனடா அரசு, இந்த விவகாரத்தில் கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் சர்மா மற்றும் சில தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு இருந்தது.  இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறைக்கு கனடா அரசு கடிதம் அனுப்பியது.

கனடாவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, அந்த நாட்டுக்கான இந்திய தூதர் மற்றும் விசாரணைக்கு இலக்காகி இருக்கும் பிற தூதரக அதிகாரிகளை மத்திய அரசு திரும்பப்பெற்றது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வெளிநாட்டு தலையீடு தொடர்பான விசாரணை ஆணையத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆஜரானார். அதனைதொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவாளிகளின் தொடர்பு குறித்து உளவுத் தகவலின் அடிப்படையில்தான் குற்றச்சாட்டை முன்வைத்தேன். இது குறித்து, சமீபத்தில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் கேள்வி எழுப்பி இருப்பேன். ஆனால் அதை நாங்கள் தவிர்த்தோம். நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணையில் இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்த்தோம்.

இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க வலுவான ஆதாரம் இல்லை. இணைந்து பணியாற்றி ஆதாரத்தை கண்டறியலாம் என தெரிவித்தோம். இதற்கு இந்தியா முன்வரவில்லை. விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை. கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்