டிரம்பை கொல்ல இடதுசாரிகள் முயற்சி - பா.ஜ.க எம்.பி கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு
டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சி குறித்த பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பா.ஜ.க எம்.பி. கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார்.;
டெல்லி,
தமிழில் தாம்தூம், சந்திரமுகி-2, தலைவி உள்ளிட்ட படங்களிலும், இந்தியில் பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாசல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த நபர் டொனால்டு டிரம்பை சுட்டார். இந்த சம்பவத்தால் பரபரப்பான சூழல் உருவானது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது. இதைத் தொடர்ந்து டிரம்பை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிக்கொண்டு அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் தற்போது நடிகை கங்கனா ரனாவத் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சி குறித்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், டிரம்ப் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது சுடப்பட்டார். கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பினார். ஆதலால் இடதுசாரிகள் அவநம்பிக்கை அடைந்துள்ளனர். மேலும் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
கிட்டத்தட்ட 80 வயதாகும் இந்த மனிதர், தன் மீது பல தோட்டாக்கள் பாய்ந்தும் 'அமெரிக்கா வாழ்க' என்று கோசமிட்டார். வலதுசாரிகள் சண்டையை தொடங்கவே இல்லை, அதனை முடிவு கட்ட நினைக்கின்றனர் என்றார்.
"டிரம்ப்பின் மார்பில் புல்லட் பாய்ந்தன, ஆனால் அவர் மட்டும் புல்லட் புரூப் ஜாக்கெட் அணியாமல் இருந்திருந்தால் இந்த கொலை முயற்சியில் உயிர் பிழைத்து இருக்க மாட்டார். வலதுசாரிகள் அமைதிக்காக சண்டையிடுபவர்கள். இடதுசாரிகள் அடிப்படையில் அன்பு மற்றும் அமைதியை நம்புகிறார்கள். ஆனால் இப்போது டிரம்பைக் கொல்ல முயன்றனர், ஆனால் ஒருபோதும் வெறுப்பும் வன்முறையும் வெற்றி பெறாது", என்று கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.