கேரளா: பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

விடுமுறை கிடைக்காத விரக்தியில் பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-12-17 01:54 GMT

மலப்புரம்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்தவர் வினீத் (வயது 33). இவர் மலப்புரம் மாவட்ட ஆயுதப்படை முகாமில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். கேரள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. இதை கண்காணிக்கவும், அவர்களை கைது செய்யவும் கேரளாவில் தண்டர்போல்ட் பிரிவு உள்ளது. இதில் வினீத் பணிபுரிந்து வந்து உள்ளார்.

இதற்கிடையே அவர் விடுமுறை கேட்டு தனது உயர் அதிகாரிகளை அணுகி உள்ளார். அதற்கு அவர்கள் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிகிறது. கடந்த 45 நாட்களாக விடுமுறை கிடைக்காததால், வினீத் மன உளைச்சல் அடைந்தார். இதுகுறித்து அவர் தனது நண்பர்களிடம் பேசி வந்தார். இதனை தொடர்ந்து விடுமுறை கேட்டு வந்ததால், வினீத்தை உயர் அதிகாரிகள் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் வினீத் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் ஆயுதப்படை முகாமில் துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர் திடீரென ஏ.கே.-47 துப்பாக்கியால் தனது தலையில் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். சத்தம் கேட்டு போலீசார் ஓடி வந்து, வினீத்தை மீட்டு மலப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வினீத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் அதே ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து மலப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்