ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல் - வெளியான ரகசிய ஆவணங்கள்

ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவது தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியாகியுள்ளது.

Update: 2024-10-21 22:40 GMT

 ஜெருசலேம்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர்.

அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த கிளர்ச்சி குழுக்கள், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் உதவி செய்து வருகிறது.

இதனிடையே, இஸ்ரேல் மீது கடந்த ஏப்ரல் மாதம் 170 டிரோன்கள், 150 ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியது. அதேபோல், கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியது. சுமார் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த 2 தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டன. பெரும்பாலான ஏவுகணைகள் நடு வானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதேவேளை, ஏவுகணை தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதற்காக ராணுவ தளவாடங்களை இஸ்ரேல் நகர்த்தி வருவதாக அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணம் 5 கண்கள் எனப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் உளவு கூட்டமைப்பிடம் பகிரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆவணம் டெலிகிராம் சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரகசிய ஆவணம் வெளியான விவகாரம் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்