குடும்பத்தினர் கண் முன்னே விமான விபத்தில் இந்திய டாக்டர் உள்பட 2 பேர் பலி
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெற்றோர் மற்றும் சகோதரர் கண் முன்னே விமான விபத்தில் இந்திய டாக்டர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர்.;
ஐக்கிய அரபு அமீரகம்,
ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா பகுதியில் இலகு ரக விமானம் ஒன்று பயணித்தது. அப்போது, அது விபத்தில் சிக்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் சுலைமான் அல் மஜித் (வயது 26) உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இணை விமானியாக சுலைமான் இருந்துள்ளார். அவருடன், பாகிஸ்தானை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் சென்றுள்ளார். 2 பேரும் விமான விபத்தில் பலியாகி விட்டனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து வளர்ந்தவரான சுலைமான், அவருடைய குடும்பத்தினருடன் பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கும் ஆவலில் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார். அவருடைய தந்தை, தாய் மற்றும் இளைய சகோதரர் ஆகியோர் விமானம் நிறுத்தும் கிளப்பில் இருந்தனர். விமானம் எப்படி பறக்கிறது என்று பார்வையிட்டனர்.
சுலைமான் வந்த பின்னர், அவருடைய இளைய சகோதரர், அடுத்து செல்வதற்காக திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்குள் விபத்தில் மஜித் இறந்ததும் குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்தனர்.
பீச்சை ஒட்டி இருந்த கோவ் ரோடனா ஓட்டல் அருகே இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து ஏற்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டு அறையுடனான சிக்னல் தொடர்பை விமானம் இழந்ததும், பின்னர் அவசர தரையிறக்கம் செய்ய முயற்சித்ததும் முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் மருத்துவ கூட்டமைப்பில் தீவிர தொடர்பில் இருந்த அவர் தர்ஹாம் கவுன்டி மற்றும் டார்லிங்டன் என்.எச்.எஸ். அறக்கட்டளையில் மருத்துவராகவும் இருந்து வந்துள்ளார்.
இளநிலை டாக்டர்களை பயிற்சி டாக்டர்களாக வகைப்படுத்த கோரியும், முறையான சம்பளம் வழங்க கோரியும் கூட்டமைப்புடன் இணைந்து, அதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், விமான விபத்திற்கான காரணம் பற்றி விமான போக்குவரத்து கழகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.