சவுதி அரேபியாவில்... ஒரு ஜோடி செருப்பின் விலை ரூ.1 லட்சம்; அப்படி என்ன உள்ளது..?
சவுதி அரேபியாவில் ரப்பரில் செய்யப்பட்ட ஒரு ஜோடி செருப்பின் விலை இந்தியர்களின் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையிலான பேசுபொருளாகி இருக்கிறது.
ரியாத்,
சவுதி அரேபியா நாட்டில் செருப்பு விற்பனை செய்யும் சில்லரை விற்பனை கடை ஒன்றில் ஒரு ஜோடி செருப்பின் விலை அந்நாட்டு மதிப்பின்படி 4,500 ரியால்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்திய மதிப்பில், இந்த ஜோடி செருப்பின் விலை ரூ.1 லட்சம் ஆகும். ரப்பரில் செய்யப்பட்ட இந்த ஒரு ஜோடி செருப்பு இந்தியர்களின் மத்தியில் சர்ச்சைக்குரிய பேசுபொருளாகி இருக்கிறது.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்துள்ளது. பச்சை, சிவப்பு, நீலம் போன்ற பல வண்ணங்களை பக்கவாட்டில் கொண்ட அந்த வெள்ளை நிற ரப்பர் செருப்பு, கண்ணாடி பெட்டி ஒன்றில் மூடி வைக்கப்பட்டு உள்ளது. அதனை கையுறை அணிந்த நபர் ஒருவர் கையில் எடுத்து காண்பிக்கிறார்.
அந்த செருப்பை முன்புறம், பின்புறம் என நன்றாக வளைத்தும், அழுத்தியும் காட்டினார். 4,500 ரியால் விலையில் நவீன காலத்து காலணி என்று வீடியோவின் தலைப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதில் ஒருவர், எந்த பொருளையும் அவர்கள் உயர்ந்த விலைக்கு விற்க முயற்சிக்கிறார்கள் என தெரிவித்து இருக்கிறார். மற்றொருவர், அதனால் நாம் அனைவரும் நம்முடைய வாழ்நாள் முழுவதும் ரூ.1 லட்சம் மதிப்பிலான காலணிகளை கழிவறையில் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம் என்றும் இன்னொருவர், எங்களுடைய குடும்பத்தின் குளியலறை காலணிகள் அவை என்றும் பதிவிட்டு உள்ளார்.
4-வது நபரோ, இந்தியாவில் ரூ.60-க்கு இந்த காலணிகளை நீங்கள் வாங்க முடியும் என்றும் 5-வது நபரோ நாங்கள் இவற்றை கழிவறைக்கு செல்வதற்காகவே அதிக அளவில் பயன்படுத்துகிறோம் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
இன்னொருவரோ, ஊழல் அதன் உச்சத்தில் இருக்கிறது என்றும், இந்தியாவின் சில பகுதிகளில் நாங்கள் ரூ.30-க்கு கூட இவற்றை வாங்குவோம் என்று மற்றொருவரும் தெரிவித்து உள்ளனர்.