குவைத் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

பிரதமர் மோடியின் பயணத்தில், ராணுவம் மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2024-12-21 11:55 GMT

குவைத்,

பிரதமர் மோடி குவைத்திற்கு 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர் இன்று புறப்பட்டு சென்றார். அவருடைய இந்த 2 நாள் பயணத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை சந்தித்து உரையாடுவதுடன், இந்தியா மற்றும் குவைத் இடையே பல்வேறு பிரிவுகளில் நட்புறவை வலுப்படுத்தும் வகையில், குவைத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இதேபோன்று, குவைத்தில், முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரியான 101 வயதுடைய மங்கள் செயின் ஹண்டாவை, பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து பேச இருக்கிறார். இந்த சூழலில், குவைத் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு விமான நிலையத்தில் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரியான ஷேக் பகத் யூசப் சவுத் அல்-சபா மற்றும் பலர் வரவேற்றனர்.

இதன்பின்னர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை சந்தித்து அவர் பேசினார். அப்போது அவர்கள் கைகளில் இந்திய தேசிய கொடியுடன் பிரதமரை வரவேற்றனர். அவர்கள் பிரதமருக்கு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தனர். கடந்த 1981-ம் ஆண்டு கடைசியாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குவைத்துக்கு பயணம் மேற்கொண்டார். அவருக்கு அடுத்து பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தில், ராணுவம் மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்