காசா போர்: 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.

Update: 2024-11-16 17:12 GMT

காசா,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.

அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. அதேபோல், லெபானானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 13 மாதங்களில் 43,799 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,03,601 பேர் காயமடைந்ததாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் கொல்லப்பட்டதாகவும் ஹமாஸ் அமைப்பினர் ஆளும் காசா பகுதியின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசாவின் அருகாமையிலுள்ள ஜபாலியா மற்றும் பெய்ட் லாஹியா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும், ரபா பகுதியில் நடத்திய தாக்குதல்களில் ஏராளமான பயங்கரவாதிகளை ஒழித்து, பயங்கரவாத உள்கட்டமைப்பு தளங்களை தகர்த்து, ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றியதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்