வீட்டு காவலில் இருந்து வங்காளதேச முன்னாள் பிரதமர் விடுதலை... யார் இந்த கலிதா ஜியா?

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா பதவிக்கு வந்த பின், அந்நிய முதலீட்டில் கட்டுப்பாடுகளை நீக்கினார். முதல்நிலை கல்வி கட்டாயம் மற்றும் இலவசம் போன்ற மாற்றங்களை மேற்கொண்டார்.;

Update:2024-08-06 16:58 IST

டாக்கா,

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில், அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் வன்முறையாக வெடித்ததில் கடந்த ஜூலையில் 300 பேர் பலியானார்கள். கடந்த 2 நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்த வன்முறையை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார். எனினும், நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லம் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. ஹசீனா, சகோதரியுடன் நாட்டில் இருந்து தப்பி சென்றார். இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில்,, வங்காளதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை அந்நாட்டு அதிபர் முகமது சகாபுதீன் பிறப்பித்து உள்ளார். இதனுடன், கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 5-ந்தேதி வரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் அதிபர் விடுதலை செய்து உள்ளார்.

வங்காளதேச தேசியவாத கட்சியின் (பி.என்.பி.) தலைவரான பேகம் கலிதா ஜியா அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர். வருகிற 15-ந்தேதி அவருக்கு பிறந்த நாள் வரவுள்ளது. சில நாட்களில் அவர் 79-வது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது அவருக்கான பரிசாக அமைந்துள்ளது.

அவர், பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் விலகியே இருந்து வருகிறார். அவருக்கு நீரிழிவு, இருதய பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் உள்ளன என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடந்த காலத்தில், வங்காளதேசத்தின் நிறுவன தந்தையான, அவாமி லீக் கட்சியின் தலைவர் முஜிபுர் ரகுமானின் மகளான ஷேக் ஹசீனாவுடன் இணைந்து பணியாற்றினார். இதனால் உசைன் முகமது எர்ஷாத் என்பவரின் ராணுவ ஆட்சி 1990-ல் முடிவுக்கு வந்தது.

ஆனால், இருவருக்கு இடையேயான ஒத்துழைப்பு நீண்ட நாட்கள் வரை நீடிக்கவில்லை. அதன்பின் நடந்த தேர்தலில் ஹசீனாவை வீழ்த்தி கலீதா ஜியா வெற்றி பெற்றார். முதல் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார்.

இதன்பின், அதிபர் நடைமுறையை மாற்றி, அதற்கு பதிலாக நாடாளுமன்ற வடிவத்திலான அரசு முறையை அறிமுகப்படுத்தினார். இதனால், அதிகாரம் பிரதமர் வசம் இருக்கும். அந்நிய முதலீட்டில் கட்டுப்பாடுகளை நீக்கினார். முதல்நிலை கல்வி கட்டாயம் மற்றும் இலவசம் போன்ற மாற்றங்களையும் மேற்கொண்டார்.

இந்த சூழலில், ஷேக் ஹசீனா பிரதமரான பின், கலீதா ஜியாவுக்கு எதிரான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னிட்டு அவருக்கு 17 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். ஏறக்குறைய 6 ஆண்டுகளாக காவலில் இருந்த நிலையில், ஜியாவை விடுவித்து அதிபர் சகாபுதீன் உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்