3 மாதங்களில் முதன்முறையாக... உக்ரைன் மீது டிரோன், ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்ட ரஷியா
உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது 73 நாட்களில் முதன்முறையாக இதுபோன்றதொரு கூட்டு தாக்குதலை ரஷியா இன்று காலை நடத்தியுள்ளது.;
கீவ்,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றுவதும், தாக்குவதும் பின்னர் அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்பதும் தொடர்ந்து வருகிறது.
போரை முடிவுக்கு கொண்டு வரும் தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை இதில் பெரிய பலன் எதனையும் தரவில்லை. உக்ரைன் தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை கோரி வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவ மற்றும் நிதியுதவியை வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு வடகொரியாவும் ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. இது போரை தீவிரப்படுத்தும் செயல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இதனால், போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் பலன் ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.
இந்த சூழலில், உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷியா வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பு, பல மணிநேரம் வரை அதற்கான எச்சரிக்கை மணி அடித்தது. இதுபற்றி கீவ் நகரத்தின் ராணுவ நிர்வாகத்திற்கான தலைவர் செர்ஹி போப்கோ கூறும்போது, பாதுகாப்பு படைகள் பல்வேறு ராக்கெட்டுகளையும் மற்றும் 12 ஆளில்லா விமானங்களையும் தாக்கி அழித்துள்ளனர் என கூறியுள்ளார்.
இதில் ஏற்பட்ட சேதம் பற்றிய விவரங்கள் ஆய்வு செய்யப்படும் என்றார். 73 நாட்களில் முதன்முறையாக இதுபோன்றதொரு கூட்டு தாக்குதலை ரஷியா இன்று காலை கீவ் நகரத்தின் மீது நடத்தியுள்ளது.
கடந்த காலங்களில், வான் பாதுகாப்பை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பெரிய அளவில் சேதமும் ஏற்படுத்தின. இந்த தாக்குதலில் ஏற்பட்ட இடிபாடுகளில் இருந்து கிளம்பிய தீயானது, கிடங்கிலும் பரவியது என்று கீவ் கவர்னர் ரஸ்லான் கிராவ்சென்கோ கூறியுள்ளார். இதனால், மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு, விநியோகத்திலும் இடையூறு ஏற்பட்டது.