கிழக்கு துருக்கியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு
கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.;
அங்காரா,
கிழக்கு துருக்கியின் மலாத்யா மாகாணத்தில் உள்ள காலே நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.46 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் அருகிலுள்ள நகரங்களான தியர்பாகிர், எலாசிக், எர்சின்கான் மற்றும் துன்செலி ஆகிய இடங்களில் உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக துருக்கியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.