வெடிகுண்டு மிரட்டல்: ஜெர்மனியில் அவசர அவசரமாக தரையிறங்கிய விஸ்தாரா விமானம்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக டெல்லியில் இருந்து லண்டன் சென்ற விஸ்தாரா விமானம் ஜெர்மனியில் தரையிறக்கப்பட்டது.;

Update:2024-10-19 09:26 IST

பெர்லின்,

இந்தியாவில் கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நேற்று முன் தினம் ஒரேநாளில் இ-மெயில், சமூகவலைதளங்கள் மூலம் 15க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதனால், பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்ற விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு லண்டன் நோக்கி புறப்பட்ட விஸ்தாரா விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, விமானம் உடனடியாக ஜெர்மனியில் உள்ள பிராங்க்புர்ட் நகர விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஜெர்மனியில் இருந்து இங்கிலாந்துக்கு விமானம் புறப்பட்டு சென்றது.  

Tags:    

மேலும் செய்திகள்