காசாவில் பலியான 70 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள்: ஐ.நா. அறிக்கை
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 80 சதவீதத்தினர் குடியிருப்பு கட்டிடங்கள் அல்லது வீடுகளில் உள்ளவர்கள் ஆவர்.
ஜெனீவா,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் மோதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஐ.நா.வின் தேசிய மனித உரிமைகள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், காசாவில் நடந்த தாக்குதலில் பலியானவர்களின் தனிப்பட்ட விவரங்களை ஆய்வு செய்தோம். இதில், காசாவில் பலியான 70 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என தெரிய வந்துள்ளது.
இந்த தாக்குதல், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை கொள்கைகளை திட்டமிட்டபடி மீறியதற்கான அடையாளம் ஆகும். இதன்படி, 0 முதல் 4 வயதுடைய குழந்தைகள், 5 முதல் 9 வயதுடைய குழந்தைகள் மற்றும் 10 முதல் 14 வயதுடைய குழந்தைகள் என பலியான குழந்தைகள் 3 வகைகளாக உள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 80 சதவீதத்தினர் குடியிருப்பு கட்டிடங்கள் அல்லது வீடுகளில் உள்ளவர்கள் ஆவர். அவர்களில் 44 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 26 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இதற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளது.