அமெரிக்காவில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி; 37 பேர் காயம்

அமெரிக்காவில் பஸ் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 7 பேர் பலியானார்கள். 37 பேர் காயமடைந்தனர்.

Update: 2024-09-01 01:30 GMT

மிஸ்ஸிஸ்ஸிப்பி,

அமெரிக்காவின் மிஸ்ஸிஸ்ஸிப்பி மாகாணத்தின் விக்ஸ்பர்க் நகருக்கு கிழக்கே இருந்து பயணிகளை ஏற்றியபடி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

41 பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் அட்லாண்டாவில் இருந்து டல்லாஸ் நோக்கி சென்ற அந்த வர்த்தக பஸ், வாரன் கவுன்டி பகுதியில் பொவினா என்ற பகுதியருகே சென்றபோது திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் சகோதர சகோதரிகளான 6 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி உள்ளிட்ட 7 பேர் பலியானார்கள்.

37 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் விக்ஸ்பர்க் மற்றும் ஜாக்சன் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், இந்த பஸ்சின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்