வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது

வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-11-13 10:18 GMT

கோப்புப்படம்

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது, நேற்று முன்தினம் வலுப்பெற்று, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. அது வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி மெல்ல நகர்ந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் விறுவிறுப்பு அடைந்தது. கடந்த 3 நாட்களாக தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை நிலவரப்படி வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் இருந்து வடமேற்கு பகுதி நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளது. வடதமிழகம் - தெற்கு ஆந்திரா கடலோரத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளது. வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது" என்று தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்