வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி : நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு

நாளை முதல் வருகிற 13-ந் தேதி வரை தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-09 00:52 GMT

கோப்புப்படம்

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதி யில், நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பு வலுவடையா மல், அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதி களை நோக்கி நகரலாம். இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், நாளை முதல் வருகிற 13-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கும், ஓரிரு இடங்களில் மிக கனமழை வரைக்கும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (10-12-2024) கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (11-12-2024) கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

12-ந் தேதி தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் கனமழையும் பெய்யக்கூடும்.

13-ந் தேதி தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும்.

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில், அடுத்த சில நாட்களுக்கு மணிக்கு, 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி 17-ந் தேதி அல்லது 18-ந் தேதி வங்கக்கடலில் உருவாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தாழ்வு மண்டலமாகவும், சாதாரண புயலாகவும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்