வங்கக்கடலில் 'டானா' புயல் உருவானது
'டானா' புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவின் புரி பகுதிக்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே கரையைக் கடக்கும்
புதுடெல்லி,
மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவாகியுள்ளது . இந்த புயலுக்கு 'டானா' புயல் என பெயரிடப்பட்டுள்ளது
'டானா' புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஒடிசாவின் புரி பகுதிக்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
புயலை எதிர்கொள்ள மேற்கு வங்காள அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்காள அரசு அறிவித்துள்ளது.
மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ், வடக்கு 24 பர்கானாஸ், கிழக்கு மேதினிபூர், மேற்கு மேதினிபூர், ஜார்கிராம், பாங்குரா, ஹுக்ளி, அவுரா மற்றும் கொல்கத்தா ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று முதல் 26ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.