நீங்க லாபமடைய தொழிலாளர்களின் மனைவியை கொச்சைப்படுத்துவீங்களா? சு.வெங்கடேசன் கேள்வி
லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு கொண்டு வரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.;
சென்னை,
பிரபல தொழில் ஐடி நிறுவனமாக இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் தொழிலாளர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று கூறியிருந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, எல் & டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இதுதொடர்பாக எல் அண்ட் டி செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில், வாரத்திற்கு 90 மணி நேர வேலை என்ற எல் & டி நிறுவன தலைவரின் கருத்து மிகப்பெரிய லட்சியத்தை பிரதிபலிக்கிறது. அசாத்தியமான உழைப்பை போட்டால் தான் அசாத்தியமான பலன்கள் கிடைக்கும் என்று எல் & டி தலைவரின் கருத்தை ஆதரித்து விளக்கம் தெரிவித்துள்ளார். எல் & டி தலைவரின் கருத்துக்கு பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இதனைக் கண்டித்து எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது;-
வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்று எல் & டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசினார். தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்தே சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடி. முந்தைய வருடத்தை விட 43 சதவீத உயர்வு தான் மேலும் லாபமடைய தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார். அலெக்ஜாண்டர் தனது கைகளை சவப்பெட்டிக்கு வெளியே விரித்து வைக்க ஏன் சொன்னார் தெரியுமா? சுப்பிரமணியன்கள் தொடர்ந்து வருவார்கள் என்பதால் தான். தொழிலாளி 8 மணி நேரத்தை சட்ட உரிமை ஆக்கியது ஏன் தெரியுமா? இது போன்ற அபத்தமான போதனைகளை நிரந்தரமாக சவப்பெட்டியில் அறையத்தான். நீங்கள் செல்வம் பெருக்க தொழிலாளர்களின் இணையர்களின் முகங்களை கொச்சைப்படுத்தும் துணிவை உங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ, அந்த லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு கொண்டு வரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.