டெல்டா மாவட்டங்களில் பஸ் சேவைகள் நிறுத்தமா? - சமூக வலைதளத்தில் பரவிய தகவலுக்கு தமிழக அரசு விளக்கம்
பஸ் சேவைகள் நிறுத்தம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பரவிய தகவலுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.;
சென்னை,
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ. வேகத்தில் டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழலில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, உள்பட டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டெல்டாவில் மழை எச்சரிக்கை எதிரொலியாக பஸ் சேவை நிறுத்தம் என சமூக வலைதளங்களில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டது. அதில், "நாளை (இன்று) மதியம் 1 மணி முதல் ஏழு மாவட்டங்களில் பஸ் சேவை நிறுத்தம். புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பஸ் நிறுத்தம்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தனது எக்ஸ் வலைதளத்தில், அந்த நியூஸ் கார்டு பழையது என்றும், தற்போது டெல்டா கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பரப்பப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
இதன்படி டெல்டா மாவட்டங்களில் வழக்கம் போல அனைத்து பஸ்களும் இயக்கப்படும் என்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளது. இதனிடையே டெல்டாவில் கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கலெக்டர்கள், அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.