நிலம் கொடுத்து உதவிய விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
த.வெ.க. மாநாட்டிற்காக இடம் வழங்கிய விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு விஜய் விருந்து வைத்து நன்றி தெரிவித்தார்.
சென்னை,
தமிழக வெற்றிக்கழக முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டிற்காக நிலம் கொடுத்த நில உரிமையாளர்கள், விவசாயிகள் என 37 குடும்பங்களைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு நேற்று பஸ்சில் அழைத்து வரப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கட்சியின் தலைவர் விஜய் பகல் 1 மணிக்கு கட்சி அலுவலகம் வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கட்சி அலுவலகத்திற்குள் வந்த விஜய் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அவர்களின் குழந்தைகளுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். விவசாயிகளுக்கு சால்வை அணிவித்து மாநாட்டுக்கு இடம் வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார். பின்னர் அவர்களுக்கு தங்கமோதிரம் உள்ளிட்ட பரிசுபொருட்களை வழங்கி கவுரவித்தார்.
பின்னர் அவர்களுக்கு அறுசுவை சைவ வகை உணவு வகைகளை விஜய், தன் கைப்பட விருந்து பரிமாறினார். இதனைத்தொடர்ந்து விஜய்யுடனான சந்திப்பு தங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக கட்சியின் எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவை, கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வி.சாலையில், தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவோடு கொண்டாடுவதற்கு நிலம் கொடுத்து உதவிய வி.சாலையைச் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்களை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கவுரவப்படுத்தி, நன்றி தெரிவித்து மகிழ்ந்த தருணம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.