வால்பாறை: சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

பட்டப்பகலில் தாய் கண் எதிரே சிறுமியை சிறுத்தை கடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Update: 2024-10-20 07:36 GMT

வால்பாறை,

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஹினில் அன்சாரி. இவருடைய மனைவி நசீரான் கதூம். இவர்கள் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் தங்கியிருந்து, அங்குள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு அப்சார் கதூம்(வயது 4) என்ற மகள் உண்டு.

நேற்று எஸ்டேட் பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டதால், தேயிலை தோட்டத்தில் பணி இல்லை. இதனால் நசீரான் கதூம் தனது மகள் அப்சார் கதூமை அழைத்துக்கொண்டு, அங்குள்ள 14-ம் நம்பர் தேயிலை தோட்டத்துக்கு அருகில் உள்ள நிலத்தில் கீரை பறித்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென சிறுமி அப்சார் கதூம் மீது பாய்ந்து தாக்கியது. தொடர்ந்து அவளை கவ்விக்கொண்டு அங்குள்ள தேயிலை தோட்டத்துக்குள் இழுத்து சென்றது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நசீரான் கதூம் கூச்சலிட்டபடி சிறுத்தையை துரத்திக்கொண்டு ஓடினார். அவரது சத்தம் கேட்டு அங்கு சக தொழிலாளர்கள் ஓடி வந்தனர்.இதற்கிடையில் சிறுமியை தேயிலை தோட்டத்தில் போட்டுவிட்டு வனப்பகுதியை நோக்கி சிறுத்தை தப்பி ஓடியது. பின்னர் அங்கு வந்த நசீரான் கதூம் மற்றும் தொழிலாளர்கள் சிறுமியை மீட்டனர். ஆனால் சிறுத்தை தாக்கியதில் சிறுமி உயிரிழந்து இருந்தாள். இதை அறிந்து அவளது தாய் நசீரான் கதூம் கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வால்பாறை வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து, சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறை கண்காணித்து வருகின்றனர். மேலும் தேயிலை தோட்டத்தில் உள்ள புதர்களை அகற்றவும் வனத்துறை அறிவுறுத்தி உள்ளனர்.

இதனிடையே உயிரிழந்த சிறுமியின் உடலுக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து சிறுமியை கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரிடம் முதற்கட்ட நிவாரண தொகையாக வனத்துறை சார்பில் ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது. வால்பாறையில் பட்டப்பகலில் சிறுமியை சிறுத்தை கடித்துக்கொன்ற சம்பவம் தொழிலாளர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்