சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று முதல் 28 மின்சார ரெயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக 28 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது
சென்னை,
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று முதல் இருமார்க்கமாகவும் 28 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று (22-ந்தேதி) முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்பட்ட 14 மின்சார ரெயில்களும், தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இயக்கப்பட்ட 14 மின்சார ரெயில்களும் என மொத்தம் 28 மின்சார ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
இருமார்க்கமாக, 28 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை புதிய நேர அட்டவணைபடி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. மேலும், இருமார்க்கங்களிலும் ஏற்கனவே 228 ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 28 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுவதால் 200 ரெயில்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.