ஆக்கிரமிப்பு எனகூறி மக்களை அவர்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்ற முயல்வது கண்டனத்துக்குரியது - சீமான்

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் அமைந்துள்ள 32 வீடுகளை இடிக்கும் முயற்சியை அறநிலையத்துறை கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.;

Update:2024-11-22 04:40 IST

கோப்புப்படம் 

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருநெல்வேலி மாநகரம், செங்குந்தர் தெருவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் குடியிருந்து வரும் 32 வீடுகளை, கோவில் நில ஆக்கிரமிப்பு என்றுகூறி தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை இடித்து மக்களை அவர்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்ற முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

நூறு ஆண்டுகளுக்கு முன் நத்தம் நிலமாக இருந்த பகுதியில் வீடுகள் கட்டி வாழ்ந்து வரும் மக்கள், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி அமைப்புக்கு அதற்கான தீர்வையையும் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் 1981-ம் ஆண்டு திருஞானசம்பந்தர் கோவில் அறங்காவலர்கள் சார்பாக வீடுகள் அமைந்துள்ள நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என்றுகூறி திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. கோயில் நிலம் என்பதற்குப் போதிய ஆதாரம் இல்லை என்று, மக்களுக்குச் சாதகமாக வழக்கின் தீர்ப்பு அமைந்ததால், கோவில் அறங்காவலர்கள் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

அன்றாடம் உழைத்து வறுமையில் வாழும் அம்மக்களிடம் பணம் இல்லாத காரணத்தாலும், வழக்கு தொடர்பான விபரம் தெரியாத அறியாமையில் இருந்ததாலும், மேல்முறையீட்டு வழக்கில் 32 வீடுகளைச் சேர்ந்த எவரும் பங்கு கொள்ளாத நிலையில், அதனைப் பயன்படுத்தி கடந்த 1997-ம் ஆண்டு வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்றுமாறும் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருநெல்வேலி பகுதியில் பெய்த கனமழை காரணமாக, 32 வீடுகளில் 2 வீடுகள் மட்டும் சரிந்து விழுந்துள்ளது. 2 வீடுகள் இடிந்ததையும், நீதிமன்ற தீர்ப்பையும் காரணம் காட்டி தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை வீடுகளை இடிக்க ஆணை பிறப்பித்ததுடன், கடந்த 19.11.2024 அன்று காவல்துறை துணையுடன் அவ்வீடுகளை இடிக்கவும் முற்பட்டுள்ளது.

அதனை எதிர்த்து அங்கு வாழும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருநெல்வேலி நகர நாம் தமிழர் கட்சி உறவுகளும் மக்களுக்குத் துணையாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அறநிலையத்துறையின் நடவடிக்கைகளை எதிர்த்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திலும் 32 குடும்பங்கள் சார்பாக வழக்கும் தொடுத்துள்ளனர். மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் நெசவுத்தொழில் செய்து வறுமையில் வாழ்ந்து வருவதால் வழக்கைத் தொடர்ந்து நடத்தவே பணமின்றி தவித்து வருகின்றனர்.

நத்தம் நிலம் என 1910-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலம், பின்னாளில் திருஞானசம்பந்தர் கோவில் நிலம் எனத் தவறுதலாக மாற்றப்பட்டதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறும் நிலையில், அவர்களின் வீடுகளை இடிக்க தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை கடுமை காட்டுவது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயலாகும்.

'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்பதே சிவநெறி கூறும் அறநெறியாகும். எந்த கடவுளும் மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து, இன்பம் காண வேண்டும் என்பதை விரும்புவதில்லை. மக்களைத் துன்புறுத்தி கடவுளை மகிழ்விக்க முடியும் என்பது சிறந்த பக்தியும் ஆகாது. இன்றளவும் கோவில்கள் பெயரில் உள்ள ஏராளமான விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளை ஏழை-எளிய மக்கள் பயன்படுத்தியே வருகின்றனர். கருணை அடிப்படையில் அவற்றுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் யாரும் எடுப்பதில்லை எனும் நிலையில், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் வீடுகளை மட்டும் இடித்து, வலுக்கட்டாயமாக மக்களை அவர்களின் வாழ்விடத்திலிருந்து வெளியேற்ற முயல்வது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும்.

ஆகவே, திருநெல்வேலி மாநகரம், செங்குந்தர் நடுத்தெருவில் அமைந்துள்ள 32 வீடுகளை இடிக்கும் முயற்சியை அறநிலையத்துறை கைவிட வேண்டுமெனவும், அதற்கென தொடர்ந்துள்ள வழக்கையும் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்