உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
வங்காளதேசத்தை கண்டித்து 1 கி.மீ. நீள மனித சங்கிலி
வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சபர்மதி ஆற்றங்கரையோரம் உள்ள சாலையில் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு கைகோர்த்து மனித சங்கிலியை உருவாக்கினர்.
இந்து ஹீட் ரக்ஷா சமிதி என்ற அமைப்பு விடுத்த அழைப்பின் பேரில் இந்து மதத் தலைவர்கள் மற்றும் சாமியார்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மனிதச் சங்கிலியை உருவாக்கியதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விஸ்வ சம்வத் கேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித சங்கிலி போராட்டத்திற்காக ஆற்றங்கரையில் கூடியிருந்த மக்களிடம் ஆர்.எஸ்.எஸ். குஜராத் பிரிவு தலைவர் பாரத் படேல் பேசும்போது, வங்காளதேச இந்துக்களுடன் ஒட்டுமொத்த இந்து சமூகமும் ஒற்றுமையாக நிற்கிறது என்றார்.
கோட்டை அமீர் விருது தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு
தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்து வரும் ஒரு நபருக்கு குடியரசு தின விழாவில் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. இவ்விருதானது 3/3” விட்டம் அளவுள்ள வெள்ளியில் செய்யப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்ட ரூ.9,000/- மதிப்புடைய பதக்கம், ரூ.25,000/-க்கான பரிவுத்தொகை மற்றும் நற்சான்றிதழ் கொண்டதாகும்.
இந்நிலையில், 2025-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கான பரிவுத்தொகையினை ரூ.25,000/-த்திலிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கான பரிவுத்தொகையினை ரூ.5,00,000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு
2024-2025-ஆம் ஆண்டு இரண்டாம் போக பாசனத்திற்கு, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களிலுள்ள பாசன நிலங்களுக்கு 11.12.2024 முதல் 09.04.2025 வரை 120 நாட்களுக்கு 9,849.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், ஈரோடு மாவட்டத்தில், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களிலுள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை – தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 4 நாட்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 நாட்களில் ரூ.922 கோடி வசூலை கடந்த 'புஷ்பா 2'
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் 5 நாட்களில் ரூ.922 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
வங்காளதேசத்தில் மத சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்களை ஐ.நா. அகதிகள் முகமை கவனிக்க வேண்டும் என்றும், இத்தகைய மனித உரிமை மீறல்கள் மிகவும் வருத்தமளிப்பதாகவும் இஸ்கான் தெரிவித்துள்ளது.