இலங்கை கடற்படை தொடர்ந்து அடாவடி செயல்களில் ஈடுபடாமல் தடுக்க மத்திய அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

மத்திய அரசு தலையிட்டு கைதாகி உள்ள மீனவர்களை விடுதலை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Update: 2024-11-11 13:55 GMT

கோப்புப்படம் 

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 23 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிராக தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மேற்கொண்டு வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது.

2024-ம் ஆண்டு துவங்கியதில் இருந்து இதுவரை 485 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 65 படகுகளும் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் காங்கேசன் கடற்படை துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நவம்பர் 6 அன்று நடைபெற்ற இந்திய - இலங்கை கடலோர காவல் படை அதிகாரிகளின் கூட்டத்தில் மீனவர்களின் பாதுகாப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ள பின்புலத்தில், இந்த கைதுகள் நான்கு நாட்களுக்குள்ளாக நடைபெற்று இருப்பது பேச்சுக்கும் செயலுக்குமான முரணை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்களுக்கு தாங்கவியலாத பெரும் தண்ட தொகைகளை இலங்கை நீதிமன்றங்கள் விதிப்பதும், மாதக் கணக்கில் அவர்கள் சிறையில் வாடுவதும், வாழ்வாதாரங்களை இழந்து அவர்களது குடும்பங்கள் தவிப்பதுமான மனிதாபிமானமற்ற சூழல் தொடர்ந்து உருவாக்கப்படுகிறது.

எனவே, உடனடியாக மத்திய அரசு தலையிட்டு கைதாகி உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்வதை உறுதி செய்யுமாறும், அவர்களின் படகுகளை மீட்டு திரும்ப ஒப்படைக்குமாறும், இத்தகைய அடாவடி செயல்களில் தொடர்ந்து இலங்கை கடற்படை ஈடுபடாமல் இருக்க அரசு மட்டங்களிலான முயற்சிகளை மேற்கொள்ளவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்