ரெயில் மோதி தமிழர்கள் பலி- உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்
இனி வருங்காலங்களில், இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.;
சென்னை ,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் கேரள மாநிலம், சோரனூர் ரெயில் நிலையம் அருகே, பாரதப்புழா ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில், ரெயில் வரும் நேரம் அறியாமல், ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியினை மேற்கொண்டிருந்தபோது, டில்லி-திருவனந்தபுரம் விரைவு ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியறிந்து ஆற்றொணத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத் தொகை வழங்குவது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கிட வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இனி வருங்காலங்களில், இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.