5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டே சாத்தனூர் அணை திறக்கப்பட்டது - அமைச்சர் தகவல்

சிலர் மனசாட்சியைத் துறந்துவிட்டு பொய்யான தகவல்களை பரப்புவதாக அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-03 07:28 GMT

சென்னை,

5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டே சாத்தனூர் அணையில் 1.80 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது என்றும், அதிக மழை என்ற காரணத்தை புரிந்து கொள்ளாமல் சிலர் மனசாட்சியைத் துறந்துவிட்டு பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல், திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீரை வெளியேற்றியதால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர் என உண்மைக்கு மாறான தகவல் பரப்பப்படுகிறது. பெஞ்சல் புயலால் நீர்பிடிப்பு பகுதியில் பெரும் மழை பொழிவால் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

அணையின் முழு கொள்ளவான 119 அடியை நெருங்கியது. தண்ணீர் வரத்தை முன்கூட்டியே கணித்து அணையின் பாதுகாப்பு கருதி. அணைக்கு வந்த தண்ணீர், தென் பொண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல்களைப் பறப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி, சாத்தனுர் அணையின் வெள்ளப்பெருக்கு விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்த விதிகளின் 2-வது பிரிவில் சாத்தனூர் நீர்த்தேக்கத் திட்டங்களில் வெள்ளம் ஏற்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான உத்தரவுகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படிதான் தொடர்ந்து முன் கூட்டியே கணித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன. நீர் வெளியேற்றப்படும் போது கரைகளில் உள்ள கொளமாஜனூர். திருவாதனூர். புதூர் செக்கடி, ராயண்டபுரம். அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் உள்ளிட்ட பல கிராமங்களின் பெயர்களை சாத்தனூர் அணையின் உதவி செயற் பொறியாளர் குறிப்பிட்டு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்தார்.

ஆற்றில் அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார். உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. வெள்ளம் வெளியேறிய போது அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள தரைப்பாதைகள் மீது வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சாத்தனூர் அணையின் உதவி செயற் பொறியாளர் அணைக்கு வரும் நீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது எச்சரிக்கைகளையும் செய்து வந்தார். அது அரசின் கவனத்திற்கு வந்து, முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. பெஞ்சல் புயல் நவம்பர் 30ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் கலரய கடந்த போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அதீத கனமழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் 1-ம் தேதி அதிகபட்சமாக 23.10 செ.மீ மழையும். 2-ம் தேதி 18.50 செ.மீ மழையும் மொத்தம் இரண்டு நாட்களில் 41.60 செ.மீ மழை பெய்தது. அதுபோல் தென்பெண்ணையாற்றின் மேற்புற நீர்ப்பிடிப்பு பகுதிகளான கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இதுவரை கண்டியாத அளவிற்கு அதிகபட்ச மழை பெய்தது. குறிப்பாக ஊத்தங்கரையில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 50 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவானது.

தென்பெண்ணையாற்றின் குறுக்கே முக்கிய நீர் தேக்கங்களான கிருஷ்ணகிரி மற்றும் சாத்தனூர் அணைகள் வற்கனவே முழுக்கொள்ளளவை எட்டியிருந்தது. பெஞ்சல் புயலினால் பெய்த அதீத கனமழையினால் தென் பெண்ணையாற்றில் நீர்வரத்து தொடர்ந்து மிக விரைவாக அதிகரிக்க தொடங்கியது. சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவான 119.0 அடியில் 110 அடியை 25.10.2024 அன்று எட்டியதை தொடர்ந்து முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை சாத்தனூர் அணை உதவி செயற்பொறியாளர் அவர்களால் நீர் வெளியேற்றும் விதிகளின்படி (Compendium Rules) அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருந்தது. சாத்தனூர் அணையில் மொத்தமாக 7 டி.எம்.சி அளவு நீர்தான் முழு கொள்ளவாக உள்ளது. ஐந்தாவது முன்னெச்சரிக்கை அளவாக வினாடிக்கு 1,80,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கான அபாயத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 4-வது மற்றும் 5-வது முன்னெச்சரிக்கை விடப்பட்ட இடைப்பட்ட நள்ளிரவு நேரத்தில் கணிக்க முடியாத அளவுக்கு அணையில் நீர் வந்து கொண்டிருந்தது. 5-வது முன்னெச்சரிக்கை அறிவிப்புக்கு பிறகும் நீர் வரத்து குறையாமல் மிக அதிக அளவில் இருந்தது. அந்த நேரத்தில் அணையில் இருந்து மிக அதிக அளவாக 1,80,000 கன அடி தண்ணீரை திறந்துவிடாமல் போயிருந்தால், ஆணைக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டு 7 டி.எம்.சி தண்ணீரும் வெளியேறியிருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகள் எல்லாம் கணக்கில் அடங்காது. ஆறாத துயரமாக அது மாறியிருக்கும்.

பெருமளவில் வற்பட இருந்த உயிர் இழப்புகளை மிக சாதுரியமாக செயல்பட்டு, மக்களை அரசு பாதுகாத்திருக்கிறது என்பதை நீர் மேலாண்மை, அணை பாதுகாப்பியல் வல்லுநர்களுக்கு புரியும். நிலைமையை சரியாகக் கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதால்தான் பெரும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன. வீடுகள். விவசாய நிலங்கள்தான் மட்டுமே வெள்ள நீரில் மூழ்கியது. இதனையெல்லாம் புரிந்து கொள்ளாமல் உயிர்கள் விஷயத்திலும் எதிர்க் கட்சிகள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அவதூறுகளை மட்டுமே அள்ளி வீசுகின்றன. பொய்கள் என்றுமே விலை போகாது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்