ரெயில்வேக்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை: மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
ரெயில் விபத்துகளை தடுக்க 10 ஆயிரம் என்ஜின்களில் கவாச் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது என்று ரெயில்வே மந்திரி கூறினார்.;
சென்னை,
சென்னை ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்டு வரும் அமிர்த பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகளை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்துக்கு ரெயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்களின் நலனை விட அரசியல் பெரிதல்ல. ரெயில்வேக்கு இடம் ஒதுக்குவதில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
ஏழை எளிய மக்களும் வந்தே பாரத் ரெயில்களில் பயணிக்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக குறைந்த கட்டணத்தில் அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், தற்போது படுக்கை வசதி கொண்ட அம்ரித் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 50 அம்ரித் பாரத் ரெயில்கள் அடுத்த 2 ஆண்டுகளில் தயார் செய்யப்படும். நாடு முழுவதும் விபத்துகளை தடுக்க 10 ஆயிரம் ரெயில் என்ஜின்களில் கவாச் தொழில் நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.