எச்.எம்.பி.வி. தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எச்.எம்.பி.வி. தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.;
சென்னை,
சீனாவில் தற்போது எச்.எம்.பி.வி. (ஹியூமன் மிடாநிமோவைரஸ்) என்ற தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த வகை வைரஸ் குழந்தைகளை தான் அதிகமாக தாக்குகிறது. அங்குள்ள ஆஸ்பத்திரிகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இதனால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
இந்தியாவுக்குள்ளும் எச்.எம்.பி.வி. நுழைந்துவிட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 3 மற்றும் 8 மாத குழந்தைகளுக்கு இந்த எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த குழந்தைகளில் 3 மாத பெண் குழந்தை குணமாகி வீடு திரும்பியுள்ளதுது. 8 மாத ஆண் குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள தனியார் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு குழந்தைக்கும், சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு குழந்தைக்கும் தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலமாக இருப்பதாகவும், அவர்களுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், எச்.எம்.பி.வி. தொற்று குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
எச்.எம்.பி.வி. தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். பதற்றம் அடைகிற அளவுக்கு வீரியமிக்க வைரஸ் இது இல்லை. உலக சுகாதார நிறுவனம் எந்த எச்சரிக்கையும் விடுவிக்கவில்லை. எச்.எம்.பி.வி. தொற்று பரவலை கண்காணித்து வருகிறோம். தொற்று ஏற்பட்டால் 3 முதல் 5 நாட்களுக்கு சளி போன்ற பாதிப்புகள் இருக்கும்; தொற்று ஏற்படும் பட்சத்தில் 5 நாட்கள் தனிமைபடுத்திக் கொண்டால் தானாகவே குணமாகிவிடும். பொது இடங்களில் முகக்கவசம் அணிவதால் தொற்றை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.