பொங்கல் பரிசு தொகுப்பு: நாளை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும்
நாளை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;
"தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில், முதல்-அமைச்சர் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் சேர்த்து மொத்தம் 2,20,94,585 குடும்பஅட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றை வழங்க ஆணையிட்டுள்ளார். மேலும், பொங்கல் பரிசுடன் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்று (09.01.2025 வியாழன்) சைதாப்பேட்டை சின்ன மலையில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக நாளை (10.01.2025 வெள்ளிக்கிழமை) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு தொகுப்பினைப் பெற்றுப் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.