தேவர் நினைவிடத்தில் மரியாதை; மு.க.ஸ்டாலின் நாளை பசும்பொன் செல்கிறார்

முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

Update: 2024-10-29 09:43 GMT

சென்னை,

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பசும்பொன் சென்று, முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இது தொடர்பாக செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்117-வது பிறந்த நாள் மற்றும் 62-வது குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் 30.10.2024 அன்று காலை தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் பெருமக்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.

அதேநாளில், முதல்-அமைச்சர் மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கும், மதுரை, தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

பசும்பொன் தேவர் ஆன்மீகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகிய முக்கியக் கொள்கைகளைத் தன் வாழ்நாளில் இறுதிவரை உறுதியாகப் பின்பற்றியவர். முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்