முதல்-அமைச்சர் வீடு அருகே கத்தியுடன் பிடிபட்ட வாலிபரால் பரபரப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு அருகே கத்தியுடன் வாலிபர் பிடிபட்டார்.;

Update: 2024-11-26 23:22 GMT

சென்னை,

சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு அமைந்துள்ளது. இந்த பகுதியில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், நேற்று முதல்-அமைச்சரின் வீடு அருகே சந்தேகத்துக்கிடமாக வந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் மதுபோதையில் இருப்பது தெரிய வந்தது. மேலும் அவரை சோதனை செய்ததில் பையில் கத்தி ஒன்று இருந்தது. இதைத்தொடர்ந்து தேனாம்பேட்டை போலீசாருக்கு முதல்-அமைச்சர் வீட்டு பாதுகாப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் விரைந்து வந்த தேனாம்பேட்டை போலீசார் வாலிபரை அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், மறைமலைநகரை சேர்ந்த ஜான் என்பது தெரியவந்தது. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கீழே கிடந்த கத்தியை காய்கறி வெட்டுவதற்காக வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் முதல்-அமைச்சர் வீடு அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்