நாளை மறுநாள் திருமணம்... கப்பல் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இருவீட்டாரும் செய்து வந்தனர்.;

Update: 2024-11-18 01:20 GMT

கடலூர்,

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நெடுஞ்சாலை நகர் சுப்புராய தெருவை சேர்ந்தவர் தனசேகர் மகன் பிரசாத். மீனவரான இவர் கப்பல் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் நாளை மறுநாள் (புதன்கிழமை) கடலூரில் வைத்து திருமணம் நடக்க இருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இரு வீட்டாரும் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரசாத் சாப்பிட்டு விட்டு மாடியில் உள்ள அறையில் தூங்குவதற்காக சென்றார். நேற்று காலை வெகு நேரமாகியும் பிரசாத் அறை கதவு திறக்காததால் தனசேகர் சென்று பார்த்தார். அப்போது பிரசாத் மின்விசிறியில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து இறந்த பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தனசேகர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்பதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்