'நான் பேசுவதை கேட்டுவிட்டு வெளிநடப்பு செய்யுங்கள்': எடப்பாடி பழனிசாமி வெளியேறும்போது மு.க.ஸ்டாலின் ஆவேசம்

தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.;

Update:2025-03-20 16:07 IST
நான் பேசுவதை கேட்டுவிட்டு வெளிநடப்பு செய்யுங்கள்: எடப்பாடி பழனிசாமி வெளியேறும்போது மு.க.ஸ்டாலின் ஆவேசம்

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 4-வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடைபெற்று இருப்பதாகவும், தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வாக கொலை சம்பவங்கள் நடந்து வருவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. குற்றவாளி யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதில் எந்த பாரபட்சமும் காட்டப்படுவதில்லை.

2023-ம் ஆண்டு 49,280 கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்த நிலையில், 2024-ல் 31,498 குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கை காரணமாக ஒரே ஆண்டில் 17,782 குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன. எண்ணிக்கை அடிப்படையில் 6 சதவிகிதம் கொலைகள் குறைந்துள்ளன. பழிக்குப் பழி வாங்கப்படும் கொலைகளும் குறைந்துள்ளன.

2023-ம் ஆண்டு 181 மற்றும் 2024-ல் 242 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் 2012-ம் ஆண்டு 1,943 கொலைகள், 2013-ல் 1,927 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் 2024-ம் ஆண்டில்தான் மிகக் குறைவாக 1,540 கொலைகள் நடந்துள்ளன" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "தூத்துக்குடி சம்பவம், சாத்தான்குளம் சம்பவத்தை எல்லாம் மறந்துவிடக் கூடாது. தொலைக்காட்சியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. தைரியம் இருந்தால் நான் பேசுவதை கேட்டுவிட்டு அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யுங்கள்" என்று தெரிவித்தார். இருப்பினும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும் போதே அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்