'தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் தவறாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல' - ஜி.கே.வாசன்

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் தவறாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-19 00:49 GMT

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேசிய கீதம் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பது போல், தமிழ்த்தாய் வாழ்த்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"தமிழக கவர்னர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் தவறாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல. இனிவரும் காலங்களில் நிகழ்ச்சி நடத்துவோர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை முறையாக, சரியாக, முழுமையாகப் பாடி தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

தேசிய கீதம் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பது போல், தமிழ்த்தாய் வாழ்த்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற பிழைகள் இல்லாதவாறு பாடுவதற்கு சரியாக, முறையாக ஒத்திகை நடத்தப்பட வேண்டும்.

நிகழ்ச்சி நடத்துவோர் ஒத்திகை நடத்தி தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை சரியாகப் பாடி தமிழுக்கு உரிய பெருமை சேர்க்க வேண்டும். எனவே தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை முறையாக, சரியாக, முழுமையாகப் பாடுவதே தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை என்பதை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்