பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை கல்லூரி மாணவர்கள் மூலம் மேற்கொள்வதா? - சீமான் கண்டனம்
பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை அனுபவமற்ற கல்லூரி மாணவர்கள் மூலம் மேற்கொள்ள முனைவது கண்டனத்துக்குரியது என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை அவசரகதியில் அனுபவமற்ற வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் மேற்கொள்ள தி.மு.க. அரசு முனைவது வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்திய ஒன்றிய அரசு, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வேளாண் திட்டங்களை வகுப்பதற்கு ஏதுவாக, அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் உள்ள நிலங்களின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகள் வருமானம், கடன், காப்பீடு உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் மின்னணு அளவீடு முறையில் தொகுத்து அளிக்க வேண்டுமென கடந்த 2023-ம் ஆண்டு கோரியிருந்தது. அதன்படி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் அனைத்தும் அளவீடு பணிகளைத் தொடங்கி தற்போது ஏறத்தாழ 90 விழுக்காடு பணிகளை முடித்துவிட்டன.
ஆனால், தமிழ்நாட்டில் மின்னணு அளவீடு பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான அளவீடு கருவிகள் உடனடியாக வழங்க வேண்டுமெனவும், வழக்கமான பணிகளோடு கூடுதலாக மேற்கொள்ளப்படும் இவ்வளவைப் பணிகளுக்கு உரிய 'மதிப்பூதியம்' வழங்க வேண்டுமெனவும் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் தி.மு.க. அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதற்கெனப் போராட்டமும், அரசுடன் பேச்சுவார்த்தையும் மேற்கொண்ட நிலையில், அதனை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு அலட்சியப்படுத்தியதால், மின்னணு அளவீடு பணிகளைப் புறக்கணிப்பதாக கிராம நிர்வாக அலுவலர்கள் அறிவித்தனர்.
மின்னணு அளவீடு தகவல்களை எதிர்வரும் 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இந்திய ஒன்றிய அரசிடம் அளிக்க வேண்டிய கட்டாயமிருப்பதால், தமிழ்நாடு அரசு அவசரகதியில் மின்னணு அளவைப் பணிகளைத் தற்போது மேற்கொள்கிறது. அதன் காரணமாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அனுபவமற்ற வேளாண் கல்லூரி மாணவர்களை இப்பணிகளில் ஈடுபடுத்த முயல்கிறது. வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் வேளாண் கல்லூரிகளில் படிக்கும் ஏறத்தாழ 20,000 மாணவ-மாணவியரைக் கட்டாயப்படுத்தி இப்பணிகளை மேற்கொள்ள பல்கலைக்கழக நிர்வாகம் மூலம் தி.மு.க. அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாணவர்களின் தேர்வுகள் உட்பட கல்விப்பணிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், இப்பணிகளைச் சரிவரச் செய்யாவிட்டால் மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்றும் மாணவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.
பயிர் சாகுபடி விவரங்களை அரசு பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டியது தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையின் முதன்மைப் பணிகளில் ஒன்றாகும். ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிய கூடுதல் பணிக்குரிய ஊக்கத்தொகையை வழங்க தி.மு.க. அரசு மறுப்பதால் அவர்கள் அளவீடு பணிகளைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள அப்பகுதியைப் பற்றி நன்கு அறிந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் பதிவேடு பணிகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே தகவல்கள் துல்லியமாகவும், சரியாகவும் இருக்கும். மாறாக அனுபவமற்ற வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் பணிகளை மேற்கொள்வது அளவீடுகளைச் சரியாகவும், முழுமையாகவும் மேற்கொள்ளாது அதிகளவில் தவறுகள் நிகழ வாய்ப்பேற்படும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு கிராம நிர்வாக அலுவலர்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிய மின்னணு அளவீடு பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான அளவீடு கருவிகள் மற்றும் உரிய ஊக்கத்தொகையை வழங்கி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் அளவீடு பணிகளை முறையாகவும், சரியாகவும் மேற்கொள்ள வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.