பாஜக அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? - அண்ணாமலைக்கு திருமாவளவன் கேள்வி

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update:2024-12-09 16:55 IST

சென்னை,

சென்னை நந்தனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுக குறித்து பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, கட்சி நலன்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டதால் விடுதலை சிறுத்தைகள் துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்டு செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அறிவித்தார்.

முன்னதாக, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்து நேற்று கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பாஜக தலைவர் அண்ணாமலை, திருமாவளவன் கட்டுப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை. விசிக யார் கையில் உள்ளது? திருமாவளவன் கையில் உள்ளதா? அல்லது துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கையில் உள்ளதா?.

திருமாவளவன் செல்லாத நிகழ்ச்சிக்கு அவரது கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா எப்படி சென்றார்?. விசிகவிற்கு ஒரு தலைமையா? அல்லது இரண்டு தலைமயா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், விசிக திருமாவளவன் கையில் உள்ளதா?; ஆதவ் அர்ஜுனா கையில் உள்ளதா? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த திருமாவளவன், பாஜக அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா?; மோடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்பதை அண்ணாமலை சொல்லட்டும். அதற்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி யார் கையில் உள்ளது என்பதற்கு நான் பதில் சொல்கிறேன்' என்றார்.  

Tags:    

மேலும் செய்திகள்