முதல்-அமைச்சரைப்போல அரசியல் ஞான ஒளி எனக்கு இல்லை - ராமதாஸ்

முதல்-அமைச்சரைப்போல ஞான ஒளியை தான் பெறவில்லை என்றும், வருத்தமாக இருப்பதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;

Update:2024-11-28 11:04 IST

சென்னை,

கடந்த 25-ம் தேதி சென்னை கண்ணகி நகரில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்-அமைச்சர் மு க ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, 'அதானி ஊழல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை கொடுத்திருக்கிறாரே, உங்களின் பதில் என்ன ?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "அவருக்கு வேறு வேலை இல்லை.. தினமும் ஒரு அறிக்கை கொடுப்பார். அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறிவிட்டு சென்றார்.

முதல்-அமைச்சரின் இந்த பதில், பா.ம.க.வினரைக் கொந்தளிக்க வைத்தது. அதே சமயம் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "அறிக்கை என்பது எங்களுடைய யோசனைகள். அறிக்கை விடுவது எங்களுடைய கடமை. எங்களுடைய உரிமை. அதனால் அறிக்கை விடுகிறோம். தமிழ்நாடு மக்கள் நலம் பெற வேண்டும். வளர்ச்சி பெற வேண்டும் என்ற காரணத்தால் தான் அறிக்கை விடுக்கின்றோம். அந்த நல்ல யோசனைகளை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். எனவே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வேறு வேலையில்லாததால் அறிக்கை விடுவதாக மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "முதல்-அமைச்சரைப் போல பிரகாச ஞான ஒளி எனக்கு இல்லை தான். அது சாதாரண ஞான ஒளி அல்ல... அரசியல் ஞான ஒளி. நான் என்ன செய்ய முடியும்..?. எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று ராமதாஸ் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்